search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசிகள் விற்பனை"

    கர்நாடகா மாநிலத்தில் விளையும் பொன்னி ரக அரிசிகளின் விற்பனை சந்தையாக தமிழகம் முற்றிலும் மாறி விட்டது. டெல்டா மாவட்டங்களில் வறட்சி காரணமாக 75 சதவீத விவசாயிகள் வேலையின்றி தவிக்கின்றனர். #TNfarmers #delta
    தஞ்சாவூர்:

    உலகின் முதல் தொழில் விவசாயம். இந்த தொழிலில் தமிழனே தலைசிறந்து விளங்குகிறான்.

    தமிழகத்தில் ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த நெல்ரகங்கள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இயற்கை விவசாயத்தை தமிழக விவசாயிகள் கடைபிடித்து வந்தனர். இதனால் மண் வளம் பாதுகாக்கப்பட்டது.

    இந்தநிலையில் வெளிநாட்டு வேளாண் முறைகள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு குட்டை நெல் ரகங்கள் அதிகமாக பயிரிடப்பட்டன. இதனால் கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் திகழ்ந்தன. லட்சக்கணக்கான ஏக்கரில் சம்பா சாகுபடி செய்து வந்தன. காவிரி நீர் பாசனத்தில் முப்போகம் விளைச்சல் கண்ட டெல்டா மாவட்டங்கள் செல்வச் செழிப்போடு திகழ்ந்தன.

    கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டதால் டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சாகுபடி கூடசெய்வது அரியதாகி விட்டது. வறட்சியின் காரணமாக வயல்வெளிகள் பாலைவனம் போல காட்சி தருகின்றன.

    தமிழகத்தில் நெல் சாகுபடி வீழ்ச்சியை சந்தித்த நிலையில் கர்நாடகாவில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. அங்கு ஒரு போகம் விளைந்த இடங்களில் தற்போது முப்போகம் சாகுபடி நடைபெற்று வருகின்றன.

    இதனால் அங்கு விளையும் நெல் அரவை செய்யப்பட்டு தமிழகத்திற்கு அதிகளவில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    தமிழகத்தில் விளையும் நெல் அரசு மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பொது வினியோக திட்டத்திற்கு அரிசி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலைமை ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கர்நாடகா பொன்னி அரிசி பெரும் அளவில் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அரிசி கிலோ ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்படுகிறது. சுருக்கமான சொன்னால் கர்நாடகா மாநிலத்தில் விளையும் பொன்னி ரக அரிசிகளின் விற்பனை சந்தையாக தமிழகம் முற்றிலும் மாறி விட்டது.

    இதனால் கர்நாடக விவசாயிகளிடம் நல்ல விலை கொடுத்து வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக கர்நாடகா விவசாயிகள் நல்ல பொருளாதார நிலையை எட்டி உள்ளனர். அவர்கள் கால்நடைகளுக்கு குளிர்சாதன வசதி செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.



    தமிழகத்தில் வறட்சி காரணமாக வேலை இல்லாத நிலை ஏற்பட்டதால் டெல்டா விவசாயிகள் கேரளாவிற்கு சென்று கட்டிட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய நகரங்களில் செயல்படும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு குடும்ப செலவுகளை செய்து வருகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் தற்போது 75 சதவீத விவசாயிகள் வேலையின்றி தவிக்கின்றனர். கிராம புறங்களில் வசிப்பவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதன் எதிரொலியாக 25 சதவீத விவசாய பணிகளுக்கும் ஆட்கள் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாற்று நடவு முதல் அறுவடை வரை எந்திரங்களை கொண்டே செய்து வருகின்றனர். வயல்களில் ரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தியதால் மண் வளம் குறைந்து விட்டது.

    இதுமட்டுமின்றி மணல் கடத்தல் அதிகளவில் நடந்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் இருந்து கடத்தப்படும் மணல்கள் சென்னை, கோவை, கேரளா உள்பட பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு மாட்டு வண்டி அளவிலான மணல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. வருமானம் இல்லாத விவசாயிகள் மாட்டு வண்டியில் மணல் எடுத்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    விவசாயத்தில் கர்நாடகா முன்னேறி வரும் நிலையில் தமிழகம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்கள் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி வீட்டு மனைகளாக்கி வருகின்றனர். இதன்காரணமாக எதிர்கால தலைமுறைக்கு அரிசி கிடைக்காத நிலை ஏற்படும். அரிசிக்காக வெளி மாநிலங்களையும், வெளி நாடுகளையும் எதிர்பார்க்கும் கட்டாயம் ஏற்படும். எனவே எதிர்கால நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி தண்ணீரை வழங்காத கர்நாடகாவின் அரிசியை தமிழ்நாட்டில் வாங்குவதை புறக்கணிக்க வேண்டும்.

    தமிழகம் மற்றும் கேரளாவில் தான் அரிசியை அதிகமாக பயன்படுத்துகின்றனர். வட மாநிலங்களில் வசிக்கும் மக்கள் கோதுமையை தான் முக்கிய உணவாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் கர்நாடகா அரிசியை வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்காமல் புறக்கணித்தால் கர்நாடகா அரிசி விலை வீழ்ச்சி அடையும். இதனால் கர்நாடகா விவசாயிகள் ஆர்வம் காட்டாத சூழ்நிலை ஏற்படும்.

    அப்போது தான் தமிழகத்துக்கு வழக்கம் போல் கர்நாடகா தண்ணீர் தரும் முடிவுக்கு வரும். இதற்கு தமிழர்களிடம் ஒற்றுமை உணர்வு ஏற்பட்டால் தான் சாத்தியமான சூழ்நிலை உருவாகும்.  #TNfarmers #delta
    ×